Published Date: June 29, 2024
CATEGORY: LEGISLATIVE ASSEMBLY
இ-சேவை மைய எண்ணிக்கை 35000 ஆக உயர்த்த இலக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்:
தமிழகத்தில் இசேவை மையங்களில் எண்ணிக்கை 35 ஆயிரம் ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பதிலளித்து பேசியதாவது:-
தமிழகத்தில் தற்போது 20,000 மேற்பட்ட இசேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் எண்ணிக்கை 35,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். மேலும் நகர்புறங்களில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் கிராமங்களில் 3கி.மீட்டர் பரப்பளவுக்குள் ஒரு இசேவை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி செயல் திறன் குறைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதற்கு காரணம் அதிமுக தான். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தைப் போல மோசமான நிலையில் இருந்த ஒரு நிறுவனத்தை நான் கண்டதில்லை.
தி.மு.க ஆட்சிக்கு வந்த போது கிட்டத்தட்ட அது திவாலாகும் நிலையில் இருந்தது. அந்த நிறுவனம் ரூபாய் 575 கோடி நிதியை நிலுவை வைத்திருந்தது. ரூ.270 கோடி நிதி கேபிள் ஆப்பரேட்டர்களிடம் இருந்து திரும்ப பெறப்படவில்லை. மேலும் ரூ.170 கோடி வரை வருவாய் இழப்பை சந்திப்பு வந்தது.
தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அரசு கேபிள் டிவி நிறுவனம் நிலுவைத் தொகையை ரூபாய் 471 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எச்டி செட்டாப்பாக்ஸ் போன்ற திட்டங்களை தற்போது அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்த சூழலில் குற்றச்சாட்டு வைத்து அறிக்கை வெளியிடுவதை அரசியல் கபட நாடகமாகக் கருதுகிறேன்.
இவர் அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு.
தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும். அவற்றின் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சென்னை பெருங்குடியில் 3.6 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு மூலம் மாநிலம் முழுமைக்குமான புவியியல் நில வரைபடம் ரூபாய் 15 கோடியில் உருவாக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கல்லூரிகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள வசதிகள் வழங்கப்படும்.
இது தவிர தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் குறைந்த கட்டணத்தில் இணையதள தொலைக்காட்சி சேவைகள் சந்தாதார்களுக்கும் விரைவில் அளிக்கப்படும். வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அந்நிலையில் தொழில்நுட்பக் கொள்கை வடிவமைக்கப்பட்டு இந்தாண்டு வெளியிடப்படும்.
பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி உட்பட 16 சேவைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டு கணினி, தமிழ் மாநாடு நடத்தப்படும் என்பன உட்பட 14 அறிவிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன.
ஸ்டாலின் படம் இல்லாத புத்தகம்:
வழக்கமாக துறை அமைச்சர்களால் வெளியிடப்படும் அறிவிப்பு புத்தகங்கள் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் படங்கள் இடம் பெறுவதுண்டு. ஆனால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்பு புத்தகத்தில் யாருடைய படமும் இடம்பெறவில்லை.
அதேபோல் அனைத்து அமைச்சர்களும் பதிலுரையில் கருணாநிதி, மு.க. ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை புகழ்ந்து பேசி நன்றி தெரிவிக்கின்றனர். ஆனால் முதல்வர், பேரவை தலைவருக்கு நன்றி மட்டுமே தெரிவித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
Media: Hindu Tamil